#HemaCommitteeReport | “மோகன்லால் தகுதியை இழந்துவிட்டார்” - நடிகர் ஷம்மி திலகன் கருத்து!
மோகன்லால் சினிமா துறையில் பாலியல் புகார் குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டார் என நடிகர் ஷம்மி திலகன் குற்றம்சாட்டியுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர் கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளர் பதவியையும், இயக்குநர் ரஞ்சித் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் ராஜிநாமா செய்தனர். தொடர்ந்து மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.
முக்கியமாக, நடிகர் திலகனின் மகனான ஷம்மி திலகன், “ஹேமா கமிட்டி மூலம் பலரின் உண்மையான முகங்கள் தெரிய வர வேண்டும். இல்லையெனில், தெரிய வைக்கப்படுவார்கள். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இது குறித்து பேசுவதற்கான தகுதியை நடிகர் மோகன்லால் இழந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
மறைமுகமாகவோ நேரடியாகவோ நடிகர் மோகன்லால் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சித்திக்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மோகன்லால் பதிலளிப்பாரா? என்பதே கேரளாவின் தற்போதைய வைரல் கேள்வி.