குற்றவாளிகளுக்கு உறுதுணை? - #Whatsapp இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! நடந்தது என்ன?
இணையவழி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு வாட்ஸ் ஆப்பில் உள்ள சில கணக்குகளின் விவரங்களை காவல்துறை கோரியிருந்த நிலையில், அவற்றை தர வாட்ஸ் ஆப் நிர்வாகம் மறுத்ததால், வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குருகிராமில் காவல்துறை விசாரணை மேர்கொண்டு வரும் ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் 4 தொலைபேசி எண்களை பயன்படுத்தி, வாட்ஸ் ஆப்பில் அந்த நபர் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேற்கண்ட வாட்ஸ் ஆப் கணக்குகளின் விவரங்களை காவல்துறை கோரியிருந்தது.
இது தொடர்பாக கடந்த ஜூலை 17-ம் தேதி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் காவல்துறையிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பாக கடந்த ஜூலை 19-ம் தேதி, மேலும் விரிவான விளக்கங்களை கேட்டுள்ளது வாட்ஸ் ஆப் நிர்வாகம்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 25-ம் தேதி காவல்துறை தரப்பிலிருந்து, வழக்கு விசாரணை தொடர்பாக விரிவான தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், வாட்ஸ் ஆப் தரப்பிலிருந்து வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் விவரங்கள் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, காவல்துறை தரப்பிலிருந்து வாட்ஸ் ஆப் நிர்வாகத்திற்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுமாறு வாட்ஸ் ஆப்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, காவல்துறை கோரிக்கைகளை நிராகரித்து வாட்ஸ் ஆப் பதில் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு உறுதுணையாக வாட்ஸ் ஆப் தளத்தின் செயல்பாடு அமைந்துள்ளதால், பாரதீய நியாய சங்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ், கிருஷ்ண சௌத்ரி உள்ளிட்ட வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.