கொட்டித் தீர்த்த கனமழை | முழுகொள்ளளவை எட்டும் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள்!
கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டும் நிலையை நெருங்கியுள்ளன.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் நிலையை நெருங்கியுள்ளது.
இதேபோல பூண்டி நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 3,000 கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. மேலும் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியும் நிரம்பும் நிலையை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது.
சுமார் 19 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அவற்றை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.