வயநாட்டில் கனமழை : பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு!
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு பின் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. வயநாடு, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் மரங்கள் பெயர்ந்து சாலைகளிலும், வீடுகளிலும் விழுந்தன.
வாழைத் தோட்டங்கள் அடியோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் அதிகமாக உள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே வயநாட்டில் நடவயல் பகுதியைச் சேர்ந்த ஜோபிஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளின் மேற்கூரை சூறைகாற்றால் பெயர்ந்து விழுந்ததில், 3500க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் இறந்தன. இதனால் அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பகுதியைத் தாக்கிய சூறை காற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.