உத்தராகண்ட்டில் கனமழை: கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!
உத்தராகண்ட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
உத்தராகண்ட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஹரித்வார் சுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.
ஒருசில வீடுகள் வெள்ளத்தின் வீச்சில் இடிந்து சேதமடைந்தன. இதனால் ஹரித்வார் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான உத்தராகண்ட்டில் ஜூன் 27ஆம் தேதிமுதல் பருவமழை தொடங்கியது. இதனால் கிழக்கு உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
ஹரித்வாரில் பெய்துவரும் கனமழையால் கங்கை ஆற்றின் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஹரித்வாரில் உள்ள சுகி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், சுற்றுலா பேருந்து, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தொடர் மழையால் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அவை கங்கை ஆற்றில் சேர்ந்ததும், கங்கை ஆற்றிலும் வெகுதொலைவுக்கு வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. எனினும் இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : அரிஜித் சிங்கின் ‘ஹீரியே.. ஹீரியே..’ பாடலுக்கு ரசிகர்களான K-Pop குழுவினர்!
இதனைத் தொடர்ந்து, வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். கங்கை ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளதால், பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.