இமாச்சல பிரதேச கனமழை: 77 பேர் உயிரிழப்பு, 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்!
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 77 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு ஆகஸ்ட் 7 வரை மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் கடந்த 4 நாள்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் மந்தி பகுதியில் 79 சாலைகளும், குலு பகுதியில் 38 சாலைகளும், சம்பாவில் 35 சாலைகளும், சிம்லாவில் 30 சாலைகளும், காங்க்ராவில் 5 மற்றும் கின்னார், லாஹால், ஸ்பிதி பகுதிகளில் தலா 2 சாலைகள் சேர்த்து மொத்தம் 191 சாலைகள் மூடப்பட்டதாக மாநில அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 27-ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் 1 வரை மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 77 பேர் உயிரிந்ததாகவும், மாநிலத்திற்கு ரூ.655 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.