டெல்லியில் பெய்த கனமழை: புகைமூட்டமும் மாசுபாடும் குறைவு!
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், நேற்று பெய்த மழையால் புகைமூட்டமும் மாசுபாடுகளும் ஓரளவுக்கு குறைந்துள்ளன.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது.
மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், நேற்று பெய்த மழையால் புகைமூட்டமும் மாசுபாடுகளும் ஓரளவுக்கு குறைந்துள்ளன. டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என்பதால் காற்று மாசுபாடு மேலும் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் செயற்கை மழையை பெய்விப்பது தொடர்பாக டெல்லி அரசு ஆலோசனை நடத்தி வந்த நிலையில், மழை பெய்திருப்பது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாசு தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.