ஆப்பிரிக்காவில் கனமழை - வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளது.
அப்போது வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்களும் மீட்பு படையினருடன் இணைந்தனர். அவர்கள் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
இந்த நிலையில் மீட்பு பணியின் போது 62 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
அதனை சரிசெய்து மீட்பு பணியை துரிதப்படுத்த கிவு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், டாங்கன்யிகா உட்பட பல மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.