கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக நாளை திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையடுத்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களான வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் நேற்றிரவு (ஜூலை 28) முதல் இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்று வீசியது. வயநாடு முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள புதுமலையில் பல குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், கோழிக்கோடு மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதால் அதிகளவில் சேதம் ஏற்பட்டது. இன்று (ஜூலை 29) அதிகாலையில் தாமரச்சேரி மற்றும் அம்பயத்தோடு பகுதிகளில் திடீரென வீசிய காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன, பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், அப்பகுதியில் உள்ள ஏழு வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் கனமழை காரணமாக நாளை (ஜூலை 30) திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், முன்னதாக திட்டமிடப்பட்ட தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும், கோழிக்கோடு மாவட்டத்தில் கோடஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.