#HeavyRainAlert | கேரளாவில் இன்றும் கனமழை தொடரும்!
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வட கேரளா மற்றும் மத்திய கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யும். 24 மணி நேரத்தில் 204.4 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்கரைகளில் பேரலை எழ வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க தடை நீடிக்கிறது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை லட்சத்தீவு கடற்கரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் சில நேரங்களில் மணிக்கு 65 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை
கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.