"கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!" - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.