கனமழை எச்சரிக்கை எதிரொலி | கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!
சென்னைக்கு 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் மீது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்.16) மற்றும் 17ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநாகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் பலரும் கார்களை நிறுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் வேளச்சேரி ராம்நகர், குபேரன் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும்.
அப்போது அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீரில் மூழ்குவதால் பழுதாகிவிடும். இதனால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். தொடர்ந்து, வாகனங்களை நிறுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளச்சேரி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியும் மக்கள் மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.