கனமழை எச்சரிக்கை.. மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மயிலாடுதுறையில் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், அடுத்த 36 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழையும் மற்றும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 கடலோர கிராமங்களில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மற்றம் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தங்களது படகு மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளுமாறும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவித்துள்ளார்.