திருநெல்வேலியில் நாளை கனமழை எச்சரிக்கை - பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை (ஜன. 09) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது, “திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஜன. 09) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 10) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
யாரும் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.