26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9, 2025) இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை மக்களுக்குக் குளிர்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் தென் மாவட்டங்களானமதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களான நீலகிரி , நாமக்கல், சேலம், கரூர், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர்.
வானிலை மாற்றங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.