கனமழை எச்சரிக்கை - 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவிகளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.