காலை 9 மணி வரை கனமழை | நனைத்தபடி பள்ளிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள்!
தமிழகத்தில் காலை 9 மணிவரை மழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால், மாணவ மாணவிகள் நனைந்தபடியே சென்றனர்.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே பரவலாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், பரவலாக மழை பெய்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இன்றைய காலை நிலவரப்படி தற்போது வரை பரவலாக மிதமான மழை மட்டுமே பெய்துள்ளது என்றும் அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொட்டும் மழையில் பள்ளி மாணவர்கள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். மழை பெய்தும் விடுமுறை அளிக்காமல் இருப்பது குறித்து பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், குளிர்ச்சியான சூழ்நிலை சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குவதோடு சளி மற்றும் இருமல் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.
குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் இருப்பது, பெற்றோர்கள் உட்பட அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.