கனமழை எதிரொலி - மயிலாடுதுறைக்கு விரைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர்!
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு 70 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 வீரர்கள் கொண்ட குழுவினர் ஆய்வாளர் ரவி தலைமையில் சீர்காழியில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் – ஓபிஎஸ்!
தொடர்ந்து பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை தொடரும் வகையில் மரம் அறுக்கும் இயந்திரம், ரப்பர் படகு, பெரிய சுத்தியல், ஆங்கர், ஜெனரேட்டர், மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களுடன் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இக்குழுவில் 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் தரங்கம்பாடி பகுதிக்கும், 40 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் சீர்காழி பகுதியிலும் தங்கி பேரிடர் மீட்பு பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.