21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “தவறாக பேசவில்லை... மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” - அமைச்சர் உதயநிதி பேச்சு
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.