"கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" - வெதர்மேன் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
"கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 36பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர்.. வெதர்மேன் பிரதீப் ஜான் தொலைபேசி வாயிலாக நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
பொதுவாக 200மிமீ கடந்து மழை பெய்தால் அதனை ரெட் அலெர்ட் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் சில மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் அதனையும் தாண்டி 300மிமீ மழை பெய்தது. இதேபோல இன்றும் 300மிமீ மழை பெய்யுமா என தெரியவில்லை ஆனால் கனமழை நீடிக்கும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1க்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.