கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 22 ஆம் தேதி புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை வரை மழை தொடர்ந்தது. இந்த மழையின் காரணமாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், கீழ்கோத்தகிரியில் நட்டக்கல் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை அருகே 2 ஆவது வளைவில் பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டார்.