நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அதிகபட்சமாக நாகையில் மழை பதிவாகி உள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழ்நாடு கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று முதலே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, நாகை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!
சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மணலியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.