கேரளாவில் தொடரும் கனமழை.. மீட்பு பணியில் தொய்வு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 219 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போடப்பட்ட மர பாலம் நீரில் மூழ்கியது. மேலும், சூரல்மலை - முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது.