சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை! ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழப்பு!
கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.
இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர். இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சௌதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் மேற்கொண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 14 பேர் ஜோர்டனைச் சேர்ந்தவர்கள் எனவும், 5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புனிதப் பயணம் சென்றுள்ள சுமார் 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.