வாட்டி வதைக்கும் வெப்ப அலை - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
பிரதமர் மோடியின் தலைமையில் வெப்ப அலை பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஒடிசாவில் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பீகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், உத்தராகண்டின் சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை காரணமாக பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரையும், தமிழ்நாட்டில் ஜூன் 10-ம் தேதி வரையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வெப்ப அலை பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்புகள், தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.