அமைதி தரக்கூடிய வார்த்தைகளை தூக்கத்தில் கேட்டால் இதயத்தின் செயல் சிறப்பாக இருக்கும் - ஆய்வில் வெளியான தகவல்!
தூக்கத்தில் அமைதி தரக்கூடிய வார்த்தைகளை கேட்கும் போது அது நமது இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உறக்கம் என்பது மனித உயிர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உறக்கம் தொலைத்தால் எதுவும் சரியாக நடக்காது என்பது தான் நியதி. தேவையில்லாத குழப்பம், மன வேதனை போன்றவை உறக்கத்தை பாதிக்கிறது. நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள்.
வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது. தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
அதே சமயம், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூங்கும் போது அமைதி தரக்கூடிய வார்த்தைகளை கேட்பது இதய செயல்பாட்டை மெதுவாக்கும் என்று ஆய்வு கூறுகிறது. பிரான்ஸை சேர்ந்த மிக பழமைவாய்ந்த லீஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தூங்கும் போது நாம் கேட்கும் வார்த்தைகளுக்கு நமது உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறா எனவும் நம் இதயத்தில் எவ்வாறு மாற்றம் நிகழ்கிறது எனவும் அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.
இதன் மூலம் அவர்கள், நிதானமான அல்லது அமைதி தரக்கூடிய வார்த்தைகளை தூக்கத்தில் கேட்கும் போது, நமது இதயத்தின் செயல்பாட்டை மெதுவாக்கும் என கண்டறிந்தனர்.