‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு - ஆய்விதழில் தகவல்!
கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.