#Health | ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்? - மகப்பேறு மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக
அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (அக்.26) சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை கோட்டூர்புரம் முதல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் வரை நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டவர்கள் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"பெண்கள் மாதம் ஒரு முறையாவது தங்கள் மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும். சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி எந்த நோயும் வராமல் தடுக்க முடியும். முன்னதாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருந்தது.
தற்போது, அதை விட மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் இருந்ததை விட எதிர்பார்க்க முடியாத அளவு அதிகரித்துள்ளது. மார்பகத்தில் நிறமாற்றம், பால் வடிதல், ரத்தம் வருதல், கட்டிகள் ஏற்படுதல், அக்குளில் கட்டி ஏற்படுதல், திடீர் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கவனித்து ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் சரி செய்ய முடியும். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகையால் ஆண்களும் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும்"
இவ்வாறு மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.