“நீங்க யாருனு தெரியாது என்றார்” - விராட் உடனான அனுபவம் பகிர்ந்த சிம்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அண்மையில் தனக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பத்து தல படத்தின் ‘நீ சிங்கம் தான்’ பாடல் பிடிக்கும் என்று பெங்களூர் அணி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சிம்பு விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான் என தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி நடத்திய தக் லைஃப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்பு விராட் கோலி உடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “விராட் கோலி அடுத்த சச்சின் என முன்பே கணித்தேன். ஆனால், அவர் 2 வருடங்களுக்குத்தான் தாக்குப்பிடிப்பார் என்று பலரும் சொன்னார்கள்.
அதன்பின் விராட், பெரிய இடத்திற்கு வந்ததும் நான் அவரை சந்திக்க நேர்ந்தது.
நம்ம சொன்ன பையன் இன்னைக்கு பெரிய ஆளாகிருக்கான். ஜாலியா போய் பேசுவோம்னு அவரிடம் சென்று, ஹாய் சொன்னேன். நீங்கள் யார்? என்று கேட்டார், நான் சிம்பு என்றேன். எனக்கு நீங்க யாருனு தெரியாது என சொல்லிவிட்டார்.
நான் ஒருநாள் யார் என்பது உங்களுக்கு தெரிய வரும் அன்றைக்கு பார்த்துக்கொள்கிறேன் என மனதில் நினைத்துக்கொண்டேன். அதேபோல சமீபத்தில் அவருக்கு 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் எனச் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு வெற்றிதான்” இவ்வாறு அவர் கலகலப்பாக கூறினார்.