Social Media Election பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா? | 2014ல் நரேந்திர மோடி தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்தினார்? - விரிவான அலசல்!
சமூக வலைதளங்களை பயன்படுத்தி நடைபெற்ற முதல் இந்திய பொதுத் தேர்தல் பற்றியும் 2014 தேர்தலில் நரேந்திர மோடி தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்தும் விரிவாக காணலாம்.
நாடே விழாக்கோலம் பூண்டது போல இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இரண்டு கட்ட தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தேர்தலும் தொழில்நுட்பமும் எனும் தொடரில் இதுவரை தேர்தல்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட இணையதள போஸ்டர் முதல் சமூக வலைதளங்களால் சாத்தியமாக்கப்பட்ட அரபு வசந்த புரட்சி வரை பார்த்தோம். தற்போது பொதுத் தேர்தலில் பேஸ்புக் , டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளம் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்தியது என்பது குறித்து விரிவாக காணலாம்.
10ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தி, ஊழலுக்கு எதிரான இயக்கங்கள், 2ஜி விவகாரம் போன்றவை 2014 பொதுத் தேர்தலில் மிக முக்கியமான காரணிகளாக முன்வைக்கப்பட்டன. மறுபுறம் குஜராத்திலிருந்து வந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். குஜராத்தில் ஒலித்த ’துடிப்பான குஜராத்’ முழக்கம் கொஞ்சம் மறுவி ’துடிப்பான தேசம்’ என முழக்கங்கள் பிரச்சாரங்களாக முன் வைக்கப்பட்டன.
2014ம் ஆண்டு காலகட்டம் என்பது இந்தியாவில் கீபேட் மொபைல் போன்கள் மாறி ஆன்ராய்டு ஸ்மார்ட் போன்கள் புழங்கத் தொடங்கிய காலகட்டமாகும். மிக முக்கியமாக சமூக வலைதளங்களை கையாளும் இளைஞர்கள் அனைவரும் முதல் தலைமுறை வாக்காளர்களாக இருந்ததால் பாஜகவின் டிஜிட்டல் பிரச்சாரம் மிக வேகமாக மக்களிடம் எடுபட்டது.
2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சாரமாக கருதப்பட்டது தேநீருடன் விவாதம் எனும் பிரச்சாரமாகும். கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட இடங்களில் குழுக்கள் ஒன்றுகூடுவார்கள் அவர்களுடன் மோடி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் உரையாடுவார். இந்த குழுவை ஒருங்கிணைக்க பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டன.
2014 தேர்தலின்போது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்ட மற்றொரு பிரச்சாரம் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட 3டி பேரணியாகும். பிரதமர் மோடி ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றி பிரச்சாரம் செய்யும்படி இவை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நரேந்திர மோடி 3டி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது, தனது ஹாலோகிராஃபிக் 3D பிரச்சாரம் செய்தார். ஒரே நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் 53 இடங்களில் மக்களிடையே தோன்றி உரையாற்றியதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2015ம் ஆண்டு தாக்கல் செய்த தேர்தல் வரவு செலவு கணக்கின்படி 3டி பிரச்சாரத்திற்கு மட்டும் பாஜக ரூ.60 கோடி செலவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களை துல்லியமாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நேரத்தில், நரேந்திர மோடி பேஸ்புக்கில் 16 மில்லியனுக்கும் அதிகமான "லைக்குகள்" கொண்டிருந்தார். இதன்மூலம் உலகின் பேஸ்புக்கில் அதிகமான லைக்குகள் பெற்றிருந்த இரண்டாவது அரசியல் தலைவர் என்கிற பெருமையை பெற்றார் . அதேபோல ட்விட்டரில் அதிகம் பின்தொடரும் உலகத் தலைவர்களில் ஆறாவது இடத்தில் பிரதமர் மோடி இருந்தார்.
- அகமது AQ