"யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை" - மின்வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
மின்வேலியில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
மின் வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.