"தெலுங்கு, கன்னடம் பேசும் திராவிடர்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
யுகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில்தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், யுகாதி திருநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் அனைத்து திராவிட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான யுகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி திணிப்பு மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, தெற்கு ஒற்றுமைக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். இந்த உகாதி நம்மை ஒன்றிணைக்கும் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும்.
அனைவருக்கும் உகாதி நல்வாழ்த்துக்கள்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.