'அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினவிழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"76வது குடியரசு தினத்தில், அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பின் அடித்தளத்தை போற்றுவோம். முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது பகிரப்பட்ட கடமையை இந்த நாள் நமக்கு நினைவூட்டட்டும் . அனைவருக்கும் நம்பிக்கையும் நோக்கமும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.