ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் 'போலே பாபா' பெயர் மிஸ்ஸிங்!
12:54 PM Jul 03, 2024 IST
|
Web Editor
உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலராய் எனும் கிராமத்தில் நேற்று (ஜூலை 2) போலே பாபா எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட சொற்பொழிவு நிகழ்வில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.பலர் மூச்சு திணறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, காயமடைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 27 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான தகவலின் படி மொத்தம் 134 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 28 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பெயரில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஹத்ராஸ், அலிகர் எட்டா பகுதி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 80,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் குவிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினரான இவர்கள் அனைவரும் போலே பாபாவிடம் வந்தால் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டத்துக்கு வந்துள்ளனர். அனைவரது நம்பிக்கையும் வீணாகக் காரணமான போலே பாபா மட்டும் பிரச்சனையின்றி அங்கிருந்து தப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரதீய நியாய சன்ஹிதா பிரிவுகள் 105 (குற்றத்திற்குரிய கொலை, கொலைக்கு சமமானதல்ல), 110 (கொலை செய்ய முயற்சி), 126 (2) (தவறான கட்டுப்பாடு), 223 (முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) மற்றும் 238 (ஆதாரம் காணாமல் போனது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், அதில் போலே பாபாவின் பெயர் இல்லை என்று வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெரிசலில் பலியானவர்களில் பலரும் குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காதமையால் இறந்திருப்பதாகத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் போனதும் காரணம் என கூறப்படுகிறது.
Next Article