#GVP25 - கிங்ஸ்டன் படத்தின் First Look போஸ்டர் வெளியானது!
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25வது படமான 'கிங்ஸ்டன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார்.
கடல் பின்னணியில் திகில் சாகச படமாக தயாராகும் இப்படத்திற்கு தீவிக் வசனம் எழுதுகிறார். மேலும் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்படுவதாகவும், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிங்ஸ்டன் படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் ஜன. 9 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.