ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுவாக ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசன் தொடங்கும். அந்த வகையில், குற்றால சீசன் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குற்றாலம் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து சென்ற வண்ணம்
உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் இந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவி பகுதிகளிலும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.