“ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டுகளால் மட்டுமே முடியாது” - ‘#Thandakaaranyam’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளிவந்தவையே. இந்நிலையில் தண்டகாரண்யம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார். இணை தயாரிப்பாக நீலம் ஸ்டூடியோ மற்றும் லேர்ன் அன்ட் டீச் புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் இயற்கை அழிப்பை எடுத்துக்கூறும் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி, பீரங்கி, அணுகுண்டுகளால மட்டுமே முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும் “காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது” போன்ற வசனங்களும் இத்திரைப்படம் குறித்த விளம்பரங்களில் இடம்பெற்றுளன.