கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் - தொழிற்சாலைகள் மீது புகார்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜா கண்டிகை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் சுருதி (பாப்பன்குப்பம்), யுவஸ்ரீ, காயத்ரி (சித்தராஜா கண்டிகை), மற்றும் தாருக்கேஸ்வரி (நாகராஜா கண்டிகை) ஆகிய நான்கு மாணவிகளும், உணவு இடைவேளைக்குப் பிறகு திடீரென மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மாணவிகளை கோட்டைக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. பள்ளியைச் சுற்றிலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட மாசுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருவதால், இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அரசு விதிகளுக்கு மாறாக, அனுமதி பெறாமல் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற விபரீதங்களை தவிர்க்க, இந்தத் தொழிற்சாலைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.