#Gujarat | ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு - 15 மூத்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் அனில் மெதானியா ராகிங் காரணமாக நேற்று முன்தினம் (நவ. 16) இரவு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அந்த மாணவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நவ. 16-ம் தேதி இரவு விடுதியில் தங்கி இருக்கும் முதலாமாண்டு பயிலும் 11 மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என 3-ம் ஆண்டு பயிலும் 15 மூத்த மாணவர்கள் கூறி உள்ளனர். அவர்களை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக நிற்கவைத்து அலைக்கழித்துள்ளனர். அப்போது நிலைகுலைந்த அனில் மெதானியா சுயநினைவை இழந்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மூத்த மாணவர்கள் 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 15 பேரும் கல்லூரி மற்றும் விடுதியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.