"குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை" - பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
"குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை" என பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.
இதுகுறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “11 குற்றவாளிகளின் நடத்தை நன்றாக இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவித்ததாகவும்” தெரிவித்துள்ளது. குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
“ பில்கீஸ் பானு வழக்கு விவகாரத்தில் குற்றம் நடந்தது ஒரு மாநிலமாக இருந்தாலும், வழக்கு நடத்தப்பட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். எனவே குற்றவாளிகளின் தண்டனை காலத்துக்கு முன்னரே அவர்களை விடுவிக்கும் போது வழக்கு நடைபெற்ற மாநிலத்தை சம்மந்தப்பட்ட அரசு ஆலோசனை கேட்க வேண்டும்.
பில்கீஸ் பானு குற்றவாளிகள் விவகாரத்தில் நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம், பெண்களின் மரியாதை முக்கியம், பெண்கள் மரியாதைக்குரியவர்கள். பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்யப்படுகிறது” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.