கினியா எரிபொருள் கிடங்கு தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...
கினியாவின் தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கினியா நாட்டின் தலைநகரான கொனக்ரியில் ஏற்பட்ட எரிபொருள் கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 178 பேரில் 89 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கிடங்கில் எரிபொருள் இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வெடிவிபத்து அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை நாடு நம்பியிருப்பதால், பெரிய விநியோகத் தடங்கல் ஏற்படும் என்ற அச்சம் நிலவியுள்ளது. தலைநகரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, எரிபொருள் தொடர்பான முக்கியத் தேவைகளை கண்டறிந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.