ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் - கவுன்ட்டவுன் தொடக்கம்!
ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் இன்று பகல் 2 மணியளவில் தொடங்கியது.
நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது.
இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது.
இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும். வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இன்சாட் 3டிஎஸ் அனுப்பப்படுகிறது.