இன்று நடைபெறுகிறது குரூப் 1 முதல்நிலை தேர்வு - 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!
குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் 2.38லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பிரதான தேர்வுகளில் ஒன்றாக, குரூப் 1 பிரிவு தேர்வு உள்ளது. இந்தத் தொகுதியில் நிகழாண்டில் 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, வணிகவரிகள் உதவி ஆணையர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 21, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் தலா 1 என மொத்தம் 90 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 28ல் வெளியிடப்பட்டது.
குரூப் 1 தேர்வில் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு மற்றும் என இரண்டு தேர்வுகள் நடைபெறும். இதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மட்டும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் என மொத்தம் 2,38,247 பேர் எழுதுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் என்ற வகையில் மொத்தம் 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 797 தேர்வுக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 37,891 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வை நடத்த முதன்மை கண்காணிப்பாளர்களாக 797 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
- தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
- காலை 9 மணிவரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
- தேர்வு மையத்திற்கு கட்டாயமாக அனுமதி சீட்டினை எடுத்துச்செல்ல வேண்டும்.
- அதோடு, ஆதார் அட்டை/ பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்துசெல்ல வேண்டும்.
- அனுமதி சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ, தேர்வர்கள் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் அடையாள அட்டை நகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும்.
- ஓஎம்ஆர் தாளை கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும்.
- தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கறுமை நிற பேனா, அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்.