கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி | தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாதனை!
பிரிட்டனில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடர் பிரிட்டனில் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை, வைஷாலி எதிர்கொண்டார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.
மேலும் 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றார். இவ்வெற்றி மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேன்டிட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார்.
ஏற்கெனவே ஆண்கள் பிரிவில் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றது மூலம் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா கேன்டிட் தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது அக்கா வைஷாலி மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வைஷாலி நெருங்கி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.