உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் கடந்த
2 ஆண்டுகளாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தின் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் தொற்றுநோயில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும், குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வல்லம் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றி தூய்மையாக வைத்திட பணியாற்றிய தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்றத் தலைவர் விமலாதேவி சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வு ஊராட்சியில் வசிக்கும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி - பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!
அதேபோல், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காராமணிக்குப்பம் ஊராட்சியில்
கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் கொசுத்தொல்லையால் பாதிக்கப்படுவதாகவும், கால்வாய்கள் மற்றும் அரசின் திட்ட வீடுகள் வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள வேங்கை வாசல் ஊராட்சி பகுதியில் இன்று நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காததால் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். குறிப்பாக ஊராட்சிகளுக்கு வரும் நிதிகளை முறையாக கணக்கு காட்டாமல் ஊழல் செய்து வருவதாக முன்னாள் துணைத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.