#Maharashtra-வை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ் தொற்று - ஒருவர் உயிரிழப்பு, 111 பேர் பாதிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். நோய் தொற்று பரவி வருகிறது. இந்த சூழலில், அதே மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்த 40 வயதான நபர் சமீபத்தில் புனே சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதனையடுத்து, அவருக்கு தீடீரென மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய அவரது உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதில் அவர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே புனேயில் சுமார் 111 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜி.பி.எஸ். நோய் தொற்று என்றால் என்ன?
ஜி.பி.எஸ். நோய் தொற்று 'கிலான் பாரே சின்ட்ரோம்' என்றும் அழைக்கப்படுகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், இந்த நோய் 'ஆட்டோ இம்யூன்' என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகைதான் ஜி.பி.எஸ். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற தண்ணீரால் ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் :
கை, கால் மற்றும் முகத்தில் பலவீனம் அல்லது கூச்ச உணர்வு ஏற்படும். பலருக்கு முதுகுவலி அல்லது கை அல்லது கால்களில் வலி இருக்கும். சிலருக்கு, கால்கள், கைகள் அல்லது முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்க வழிவகுக்கும். ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மக்களில், மார்பு தசைகள் பாதிக்கப்படுவதால், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும்.