#Maharashtra-வை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ் தொற்று... உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை சுமார் 140 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேவுக்கு வந்த 40 வயதான நபர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு கடந்த கடந்த 26-ம் தேதி சோலாப்பூரில் உயிரிழந்தார்.இதேபோல் கடந்த புதன்கிழமை புனேயில் 56 வயதான பெண் ஒருவர் ஜி.பி.எஸ். பாதிப்பால் உயிரிழந்தார்.
இதற்கிடையே 36 வயதுடைய டாக்சி டிரைவர் கடந்த 21-ம் தேதி நிமோனியா, சுவாசப்பிரச்சினை காரணமாக புனேயில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செய்த சோதனையில் அவர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து, ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபர் நேற்று உயிரிழந்தார். சிங்காட் சாலையில் உள்ள தாயாரி பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த ஜனவரி 27 அன்று தளர்வான இயக்கங்கள் மற்றும் கீழ் மூட்டுகளில் பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில், அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன்மூலம், ஜி.பி.எஸ். நோயால் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.பி.எஸ். நோய் தொற்று என்றால் என்ன?
ஜி.பி.எஸ். நோய் தொற்று ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், இந்த நோய் ‘ஆட்டோ இம்யூன்’ என அழைக்கப்படுகிறது. இந்த நோயின் ஒருவகைதான் ஜி.பி.எஸ். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜி.பி.எஸ். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடலில் உணர்ச்சியற்ற தன்மை ஏற்படும், தசைகள் பலவீனமடையும், உடல் பாகங்கள் செயலிழக்கவும் செய்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற தண்ணீரால் ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் :
கை, கால் மற்றும் முகத்தில் பலவீனம் அல்லது கூச்ச உணர்வு ஏற்படும். பலருக்கு முதுகுவலி அல்லது கை அல்லது கால்களில் வலி இருக்கும். சிலருக்கு, கால்கள், கைகள் அல்லது முகத்தில் உள்ள தசைகள் செயலிழக்க வழிவகுக்கும். ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மக்களில், மார்பு தசைகள் பாதிக்கப்படுவதால், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும்.