கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!
கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். அதன்படி ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு, ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி விகே.சிங் மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.