“ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தோர் எழுதி கொடுப்பதையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார்!” - திருமாவளவன் குற்றச்சாட்டு
ஆளுநர் ஆர்.என்.ரவி எதையும் தானாக பேசவில்லை, ஆர்.எஸ்.எஸ். - ஐ சேர்ந்தோர்தான் எழுதிக் கொடுக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
வரலாற்று அறிஞர்கள் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய திருச்சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வருகை தந்ததிலிருந்து சர்ச்சைக்குரிய் பல கருத்துகளை பேசி வருகிறார். திருவள்ளுவரை பற்றி, வள்ளலாரை பற்றி, நந்தனாரை பற்றி பல்வேறு கருத்துகளை தன் விருப்பம் போல் பேசி வருகிறார். அண்மையில் பேரறிஞர் ராபர்ட் கால்டுவெல்லை பற்றி பேசியிருக்கிறார். எதுவும் அவரதுசொந்த கருத்து இல்லை. அவருக்கு தமிழை பற்றியும் தெரியாது, தமிழ்நாடை பற்றியும் தெரியாது, தமிழர்களின் வரலாறு, பண்பாடு குறித்தும் தெரியாது. பாஜக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிற ஒரு ஏஜெண்ட். மாநில ஆளுநர் என்கிற பதவியோடு மத்திய அரசின் முகவராக அவர் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த சில காலத்தில் கால்டுவெல்லை பற்றி அவர் எப்படி படித்திருக்க முடியும்.
தமிழ்நாட்டிற்கு வந்த இந்த ஒரு சில ஆண்டுகளில் அவர் வள்ளலாரை பற்றி எப்படி படித்திருக்க முடியும். திருவள்ளுவரை பற்றி எப்படி படித்திருக்க முடியும், நந்தனாரை பற்றிய வரலாறு அவருக்கு என்ன தெரியும். அவருக்கு யாரோ எழுதிக்கொடுக்கிறார்கள். அப்படி எழுதி கொடுத்துதான் அவர் பேச முடியும். இது அனைவரும் அறிந்த உண்மை. அப்படி எழுதி கொடுக்கிறவர்கள் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை ஆய்ந்தறிந்த தமிழறிஞர்களாக இருக்க வாய்ப்பில்லை. மொழியில் கைதேர்ந்த வல்லுனர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் தான் எழுதி கொடுத்திருக்க முடியும். அவர்கள் எழுதிக்கொடுப்பதை அவர் படிக்கிறார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்கிற போதே சென்ற முறை பல பத்திகளை படிக்காமல் போனார். சில சொற்களை உச்சரிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
பெண்ணுரிமை என்கிற சொல்லை கூட உச்சரிக்க மறுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பிற்போக்குத்தனமாக உள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.என்.ரவி நாகாலாந்தில் ஆளுநராக இருந்த போது அவரை எதிர்த்து ஆயிரக் கணக்கான மக்கள் போராடினர். அங்கு சிறுபான்மை மக்களிடையே சண்டை மூள காரணமாக இருந்தார். இயக்கங்களிடையேயும் பிரச்னை உண்டாக காரணமாக இருந்தார். சமூக பதற்றத்தை உருவாக்கினார். இதெல்லாம் தெரியாமல் செய்தவை இல்லை. பயிற்சியும், தேர்ச்சியும் பெற்று உண்டாக்கிய பிரச்னைகள். ஆகவே எங்கே போனாலும் தனது கருத்துகளை திணிப்பது சமூக பதற்றத்தை உருவாக்குவது உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிற பயிற்சிகளில் ஒன்று. இதனால் தான் நாகாலாந்தில் அவர் திட்டமிட்டே பதற்றத்தை உண்டாக்கினார்.
இதனால் தான் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டு ஆளுநராக அறிவித்த உடனேயே முதல் ஆளாக விசிக எதிர்ப்பு தெரிவித்தது. அவர் வந்து கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். பின்னர் அவரின் சொந்த முகத்தை காட்டத் தொடங்கினார். இப்போது தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆகவே கால்டுவெல் படித்தவரா, படிக்காதவரா, பட்டம் பெற்றவரா, பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடியவரா என்பதை எல்லாம் ஆராயாமல் எதுவும் அறியாமல் பேசவில்லை தெரியாமல் பேசவில்லை. இப்படி ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.
இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் பூர்வக்குடிகள். சிறுபான்மையினரை ஆத்திரப்படுத்தி இந்துக்களை திரட்ட இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் நோக்கத்தை நிறைவேற்ற இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் இந்துக்களுக்கு எதிரியாக நிறுத்துகிறார்கள். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களே கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். பல தலைமுறைகளாக அடிமைகளாக இருந்தவர்களுக்கு கல்வி உள்பட அனைத்து வாய்ப்புகளையும் தருகிறார்களே என்பதை தான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் கிறிஸ்துவ அமைப்புகள் மீது அவர்களுக்கு கோவம் வருகிறது.