தஞ்சாவூர் அருகே அரசுப்பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!
கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 பேர் வேனில் சென்றனர். வேன், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. செங்கிப்பட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், ஒருபுறமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரு வழிப் பாதையில் வந்து கொண்டிருந்த வேனும், எதிரே தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்தவிபத்தில் வேனில் வந்த 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்களது சடலங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் ஒரு ஆண் உயிரிழந்தார். இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் (சார்ல்ஸ்) உயிரிழப்பு. இதனால் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
நேற்றே விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.